வறட்சியால் பண்ணை குட்டை அமைத்து பயிர்களுக்கு தண்ணீர் விடும் விவசாயிகள்

0
68


ஓசூர்: ஏப்.20
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால், நிலங்களில் பண்ணை குட்டை அமைத்து, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு லட்சத்து, 13 ஆயிரத்து, 745 ஹெக்டேரில் விவசாயம் நடந்து வருகிறது. பருவமழை பொய்த்ததால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் இல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாய பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். போர்வெல்களில் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே இருப்பதால், அதை வைத்து கொண்டு, அரை மணி நேரம் கூட தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. போர்வெல்லில் குறைந்த வேகத்தில் தண்ணீர் வருவதால், தண்ணீர் பாய்ச்ச கூடுதல் நேரம் செலவாகிறது. அதை தவிர்க்கும் வகையில், விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைத்துள்ள விவசாயிகள், போர்வெல்களில் இருந்து குழாய் வழியாக பண்ணை குட்டையில் தண்ணீரை நிரப்பி, குட்டையில் சேகரிக்கப்படும் தண்ணீரை விவசாய பயிர்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதனால் வேகமாக தண்ணீர் பாய்ச்ச முடிவதுடன், போர்வெல்களில் தண்ணீர் ஊறிய பின், அதை பண்ணை குட்டைகளில் சேமித்து வைத்து, தேவைப்படும் போது உடனடியாக பயிர்களுக்கு பாய்ச்ச முடிவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மாவட்டம் முழுவதும் கடும் வறட்சியின் காரணமாக, பண்ணை குட்டை முறைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here