வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது 6 பேரை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்

0
72

தேன்கனிக்கோட்டை,அக், 12
தேன்கனிக்கோட்டை அருகே வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அந்த வீடுகளில் இருந்த 6 பேரை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ளது அர்த்தகூர் ஏரி. கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழையால் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள எல்லா ஏரிகளும் நிரம்பி உள்ளன. அர்த்தகூர் ஏரியின் நீர்செல்லும் நீர்நிலைகளை ஒட்டினாற்போல் 6 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால் அர்த்தகூர் ஏரி நிரம்பி தண்ணீர் பாய்ந்தோடியது. தாசில்தார் அலுவலகம் எதிரே கட்டப்பட்டுள்ள அந்த 6 வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. அப்போது அந்த வீடுகளுக்குள் இருந்தவர்கள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். திடீரென புகுந்த மழை வெள்ளத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.
இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் இதுபற்றி தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கயிறு கட்டி அந்த வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர். இவ்வாறு ராஜா, பெரியண்ணன், காவேரியப்பா, சகாதேவன், சின்ராஜ், மஞ்சு ஆகியோர் மீட்கப்பட்டனர். தேன்கனிக்கோட்டை தாசில்தார் மணிமொழி, துணை தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் பொதுமக்களும் இந்த மீட்பு பணிக்கு உதவி செய்தனர். நீர்நிலைகளின் அருகில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே தங்கும்படி தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே தேன்கனிக்கோட்டையில் உள்ள தேவராஜன் ஏரிக்கு நீர்வந்து நிரம்பியதை தொடர்ந்து பெண்கள் கங்கா பூஜை செய்து வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here