விவசாய பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்: தென்பெண்ணை ஆற்றில் ஆனந்த குளியல்

0
127

ஓசூர்: ஏப்.20
ஓசூர் அடுத்த போடூர்பள்ளம் காப்புக் காட்டில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், தென்பெண்ணை ஆற்றில் குளித்து விட்டு, விவசாய பயிர்களை நாசம் செய்து, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.
ஓசூர் அடுத்த போடூர்பள்ளம் காப்புக் காட்டில், மூன்று யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக வெளியேறும் யானைகள், விவசாய பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, போடூர்பள்ளம் காப்புக் காட்டில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், ஆழியாளம் கிராமம் வழியாக தென்பெண்ணை ஆற்றை கடந்து, குக்கலப்பள்ளி வழியாக பண்ணப்பள்ளி பகுதிக்கு சென்றன. நேற்று அதிகாலை, 6:30 மணி வரை, அப்பகுதியில் உள்ள தைல தோப்பில் யானைகள் முகாமிட்டிருந்ததை அறிந்த, ஓசூர், வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். அதனால் தைல தோப்பில் இருந்து வெளியேறிய யானை கூட்டம், குக்கலப்பள்ளி வழியாக தென்பெண்ணை ஆற்றுக்கு வந்தன. தென்பெண்ணை ஆற்றில், காலை, 7:30 மணிக்கு ஆனந்த குளியல் போட்ட யானைகளை, வனத்துறையினர் மீண்டும் விரட்டியதால், ராமாபுரம், ஆழியாளம் வழியாக மீண்டும் போடூர்பள்ளம் காப்புக் காட்டிற்கு சென்றன. யானைகள் வனப்பகுதிக்கு செல்லும் போது, ராமாபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுப்பிரமணி, கிருஷ்ணன் என்ற விவசாயிகளுக்கு சொந்தமான தக்காளி, ராகி, காலிபிளவர், வெண்டைக்காய் மற்றும் பாக்கு மரத்தை நாசம் செய்தன. காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் தொடர்ந்து நாசமாகி வருவதால், அவற்றை கர்நாடகா மாநிலத்திற்கு விரட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here