விவசாயிக்கு ஆதரவு தெரிவித்து பாடை கட்டி நூதன போராட்டம்

0
46

கிருஷ்ணகிரி: ஏப். 21-
டில்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் பாடை கட்டி, நூதன போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அண்ணா சிலை எதிரில், டில்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த, 17 முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நான்காவது நாளான நேற்று மதியம், 12:30 மணிக்கு நடந்த போராட்டத்தை, சி.பி.ஐ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் துவக்கி வைத்தார். போராட்டத்தின் போது, வறட்சியால் தினமும் இறந்து கொண்டிக்கும் விவசாயிக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, சங்கு ஊதி, மேள தாளத்துடன் பாடையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர், சின்னஏரியில், பாடையை வைத்து, பானை உடைத்து சடங்குகள் செய்தனர். பிறகு வறட்சியால் கருகிப் போன பயிர்களை, பாடையில் போட்டு தீ வைத்து எரித்தனர். பாடையை சுற்றி நின்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பாடை ஊர்வலத்தை, ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here