விடிய, விடிய கன மழை 15 ஆண்டுகளுக்கு பிறகு சின்னார் அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி

0
1196

சூளகிரி,அக், 12
சூளகிரியில் விடிய, விடிய பெய்த கன மழை காரணமாக 15 ஆண்டுகளுக்கு பிறகு சின்னார் அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றன.
இதனால் சூளகிரி பகுதியில் வறண்டு கிடந்த 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன. நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் 20 ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. அதே நேரத்தில் சின்னார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்தது. 37 அடி கொள்ளளவு கொண்ட சின்னார் அணை 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை நிரம்பியது. அணையில் இருந்து உபரிநீர் வழிந்தோடி வந்ததை கண்ட விவசாயிகள், கிராமமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவிளக்கு எடுக்க முடிவு
சின்னார் அணையில் நிரம்பி வழிந்தோடிய தண்ணீரை வேம்பள்ளி, இண்டிகானூர், போகிபுரம், கிருஷ்ணேபள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பி உள்ளதால் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபடவும், ஆடுகளை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தவும் உள்ளதாக ஊர்பொதுமக்கள் பலரும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here