ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் 5-வது முறையாக கோர்ட்டில் ஆஜர்

0
49

வேலூர், மே.26
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி அவரது அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 செல்போன்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்கவும், உறவினர்கள் சந்தித்து பேசவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனை பார்ப்பதற்காக இலங்கையில் இருந்து வேலூர் வந்திருந்த அவருடைய தாய் சோமணியம்மாளுக்கும், முருகனை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-1) கடந்த 22-ந் தேதி மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்னிலையில் முருகன்
ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கு விசாரணையை 25-ந் தேதிக்கு (நேற்று) மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார். அதன்படி, முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அவரை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு டோமினிக் சேவியோ தலைமையிலான துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த காவலுடன் வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
நண்பகல் 12 மணிக்கு மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்பு முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அதை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் இருபக்க கதவும் உள்பக்கமாக பூட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முருகனிடம் மாஜிஸ்திரேட்டு அலிசியா 10 நிமிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டார். அதன் பிறகு, வழக்கு விசாரணையை, அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வக்கீல் ஒருவர் ரகசிய விசாரணை குறித்து கூறுகையில், ‘சிறை அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தன்னிடம் இருந்து செல்போன் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தனக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்று கூறி முருகன் மறுப்பு தெரிவித்தார்.
மேலும் சிறையில் தன்னை தனி அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தற்போது காசநோயால் பாதித்த கைதியை தன்னுடன் அடைத்து வைத்துள்ளனர். இதனால் தனக்கும் காசநோய் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக முருகன் மாஜிஸ்திரேட்டிடம் புகார் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
முருகனை போலீசார் கோர்ட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தபோது, முருகனின் தாயார் சோமணியம்மாள் மகனை பார்த்து கண்ணீர் வடித்து அழுதார். பின்னர் அவர் கூறுகையில், ‘நான் இலங்கைக்கு செல்ல போகிறேன். அடுத்து எப்போது வேலூர் வருவேன் என்பது தெரியவில்லை. 2 மாதங்கள் வேலூரில் தங்கி இருந்தும் முருகனை பார்த்து பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது’ என்று கூறி கண் கலங்கினார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக முருகன் வேலூர் கோர்ட்டில் நேற்று 5-வது முறையாக ஆஜர் படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here