யாரும் தப்ப முடியாது: விவேக்

0
33

சென்னை, நவ. 14-
5 நாள் வருமானவரித் துறை சோதனைக்குப் பின்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், தவறாக பணம் சேர்க்கும் யாரும் வருமானவரித் துறைக்கு வரி செலுத்தியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தார்.

சென்னை உட்பட தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 187 இடங்களில் 1800 அதிகாரிகள், கடந்த 9 ஆம் தேதி வருமானவரி சோதனையில் ஈடுபட்டனர். அடுத்தடுத்த நாட்களில் மொத்தமாக 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
விவேக்தான் முக்கிய துருப்புச் சீட்டு: வருமானவரித் துறை தகவல்
இந்தச் சோதனையின் பிரதான இலக்காக விவேக் ஜெயராமன் நிர்வாகத்தின் கீழ் வரும் ஜெயா தொலைக்காட்சி, ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் பத்திரிகை உள்ளிட்ட அலுவலகங்களும், அவரது வீடு, அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடு ஆகியவற்றில் ஐந்து நாட்கள் தொடர் சோதனை நடந்தது.

விவேக் ஜெயராமன், ஜெயா தொலைக்காட்சி பொது மேலாளர் நடராஜன், நிர்வாகிகள் ஆகியோரை அருகில் வைத்துக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள ஆவணங்கள், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
சோதனையின் இறுதி நாள் வரை விவேக் ஜெயராமனை தனது பிடியில் வைத்திருந்த வருமானவரித் துறையினர் நேற்று மாலை சோதனை முடிந்ததும் தங்களுடனே அவரை அழைத்துச் சென்றனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரவு அவரை வீட்டுக்கு அனுப்பினர்.
இந்நிலையில் இன்று காலை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டின் வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த விவேக் ஜெயராமன், யாருடைய கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார். தான் சொல்வதை மட்டும் சொல்லிவிட்டு திரும்பி சென்றார்.

விவேக் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதலில் ஐந்து நாள் வருமானவரித் துறை சோதனையின் போது மழையில் காத்திருந்த என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ஊழியர்கள், ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 5 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். அவர்கள் கேட்ட ஆவணங்களை அளித்தேன்.
நான் கடந்த இரண்டு வருடமாக ஜாஸ் சினிமாவை கவனித்து வருகிறேன். ஜெயா டிவி நிர்வாகத்தை மார்ச்சிலிருந்து பார்த்து வருகிறேன்.

கடந்த ஐந்து நாட்களாக இது சம்பந்தமான டாக்குமெண்ட்ஸ் குறித்து விபரமாக கேட்டார்கள், அனைத்துக்கும் விபரமாக பதிலளித்துள்ளேன். இதை தவிர்த்து என் மனைவிக்கு கல்யாண நேரத்தில் போட்ட நகைகள் பற்றி கேட்டார்கள். அனைத்துக்கும் அக்கவுண்ட்ஸ் வைத்துள்ளேன், விரைவில் அவர்களுக்கு பதில் சொல்வேன்.

வருமானவரித் துறையினர் அவர்கள் கடமையை செய்தார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். என்ன செய்தார்கள் என்பதை சொல்கிறேன், நான் இங்கு பேட்டி அளிக்க வரவில்லை அதனால் கேள்வி பதிலாக சொல்ல விரும்பவில்லை.
இதை தவிர்த்து சில வாரங்களில் அவர்கள் என்ன கேட்பார்களோ அதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்”. அப்போது, ஐந்து நாளாக என்னதான் சோதனை செய்தார்கள்? என்று கேட்டபோது, நான் பேட்டி அளிக்க வரவில்லை என்று தெரிவித்த அவர், அவர்கள் கடமையை அவர்கள் செய்தார்கள் என்று தெரிவித்தார்.

“அவர்கள் கடமையை அவர்கள் செய்தனர், குடிமகன் என்ற முறையில் என் ஒத்துழைப்பை அளித்தேன், பழி வாங்கும் நடவடிக்கையாக இதை கருதவில்லை. யார் தப்பா பணம் சம்பாதித்தாலும் அவர்கள் வருமான வரித்துறைக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும்.
ஆகவே யார் தவறு செய்தாலும் அது நானாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும் அவர்கள் கடமையை ஆற்றியே ஆகவேண்டும். கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

கேள்விகளுக்கு பதிலளிப்பது நமது கடமை” இவ்வாறு தெரிவித்த விவேக், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சட்டென திரும்பி சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here