பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது: ஸ்ரீதேவி

0
292

ஸ்ரீதேவி இந்தியில் நடித்துள்ள புதிய படம் ‘மாம்’. ரவி உத்யவார் டைரக்டு செய்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. இதையொட்டி, ஸ்ரீதேவி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-

தாய், மகள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான கதை ‘மாம்’. இந்த படத்தின் கதையை கேட்டதுமே நடிக்க சம்மதித்துவிட்டேன். தமிழிலும் இந்த படம் வெளியாகிறது. தமிழ் பட உலகம் எனக்கு ஆதரவு அளித்ததையும், அன்பு காட்டியதையும் எப்போதும் மறக்கமாட்டேன்.

எனது படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வேண்டும் என்பது எனது தீராத கனவாக இருந்தது. டைரக்டரும், நானும் ஏ.ஆர்.ரகுமான் ‘மாம்’ படத்தில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்பட்டோம். அது நடந்துவிட்டது. ரகுமான் இசையமைத்ததன் மூலம் இந்த படத்தின் மதிப்பு மேலும் உயர்ந்து இருக்கிறது. ‘மாம்’ படத்தை அனைத்து தாய்மார்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

நான் சினிமா உலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்க்கையில் எதையும் நான் திட்டமிடவில்லை. எல்லாம் தானாகவே நடந்து இருக்கின்றன. இவ்வளவு காலம் ஆகியும் இன்னும் ஒவ்வொரு படத்திலும் என்னை புதுமுகமாக நினைத்துக்கொண்டுதான் நடிக்கிறேன். தமிழ்பட உலகை விட்டு நான் விலகி இருக்கவில்லை. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் தமிழ் படங்களில் நடிப்பேன்.

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கிறது. வெளியே செல்லும் பெண்கள் திரும்பி வருவது வரை பெற்றோர் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கும் நிலைதான் உள்ளது. பெண்கள் வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
எனது மகள் சினிமாவில் நடிப்பாரா? என்று கேட்கப்படுகிறது. அதற்கான சூழ்நிலை அமைந்தால் நடிப்பார்.

இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here