நீட்: தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு தர மத்திய அரசு தயார்- நிர்மலா சீதாராமன்

0
51

சென்னை: ஆக,13
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தரும். ஆனால் நிரந்தரமாக விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஒரே மாதிரியான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வழி வகை செய்யும் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதற்கு கடந்த மே மாதம் தேர்வு நடந்தது. தமிழகத்திலிருந்து 88,000 மாணவர்கள் தேர்வை எழுதினர்.
இந்த தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்த்ன் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதனால் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பல தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தவிடுபொடியானது.
தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க கோரிக்கை விடுத்தன. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்ட போதிலும் தமிழகத்துக்கு சாதகமான பதில் ஏதும் வரவில்லை. நீட் தேர்வில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து மாணவர்களும், கட்சியினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் தேர்வில் இருந்து தமிழகம் ஓராண்டு விலக்கு கோரினால் அதற்கு ஒத்துழைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை.
நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்குக் கோரி தமிழக அரசு சட்டசபையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரும் என்றார் அவர். இதனால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here