நடிகைகள் ‘கேரவன்’ கேட்டு அடம்பிடிக்க கூடாது: ரகுல்பிரீத்சிங்

0
191

தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் ரகுல்பிரீத் சிங். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கஷ்டப்பட்டு இருக்கிறேன். பசியாக இருந்த அனுபவமும் உண்டு. எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்து இருக்கிறேன். அது இப்போது சினிமாவில் எனக்கு உதவுகிறது. பசி, தூக்கமின்மை என்று அனைத்து சவால்களையும் என்னால் எதிர்கொள்ள முடிகிறது. என்ன சிக்கல் வந்தாலும் ஆத்திரப்படாமல் அதில் சமரசம் செய்து கொள்கிறேன்.

எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனுடன் வாழ என்னை சீக்கிரமே பழக்கப்படுத்திக்கொள்ள முடிகிறது. எந்த மொழி கலாசாரமாக இருந்தாலும் அதோடு ஒன்றி விடுகிறேன். சிறு வயதில் என் தந்தை நிறைய ஊர்களில் வேலை பார்த்தார். இதனால் பல மாநிலங்களில் வாழ்ந்து இருக்கிறேன். வெளிநாடுகளுக்கும் சென்று வந்து இருக்கிறேன். அதுதான் எந்த சூழ்நிலையிலும் வாழ என்னை தகுதியாக்கி இருக்கிறது.

சினிமா படப்பிடிப்புகள் சில நேரங்களில் காட்டுக்குள்ளும், குக்கிராமங்களிலும் நடக்கும். அங்கு எந்த வசதியும் இருக்காது. தங்குவதற்கும் இடம் கிடைக்காது. அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். படக்குழுவினருடன் தகராறிலும் ஈடுபட மாட்டேன். அங்கு ஒரு சிறிய இடம் கிடைத்தால் கூட சுருண்டு படுத்துக் கொள்வேன்.

அப்போது ருசியான உணவுகளை கேட்க மாட்டேன். எது கிடைத்தாலும் சாப்பிட்டு பசியாற்றிக்கொள்வேன். இதுபோன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது நடிகரோ, நடிகையோ வசதிகளை எதிர்பார்க்க முடியாது. கேரவன் கேட்டும் அடம்பிடிக்க கூடாது. கஷ்டங்களை தாங்கிக்கொண்டு படத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும்.

நான், இதுபோல் இடம் மற்றும் நேரம் பார்க்காமல் நடிப்பதால்தான் எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகிறது. இதுதான் எனது வெற்றியின் ரகசியமாகவும் இருக்கிறது”.
இவ்வாறு ரகுல்பிரீத்சிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here