தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

0
47

தேன்கனிக்கோட்டை, ஜூன், 19
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி, தளி, பிலிகுண்டு, தொட்டமஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இப்பகுதிகளை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை என பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மலைகிராமங்களில் பஸ் வசதி இல்லாததால் அங்கு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;– தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பீதி
தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆங்காங்கே சாக்கடை கழிவுநீரும், குப்பைகளும் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன் காரணமாகவே பொதுமக்களுக்கு நோய் ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன்கருதி மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவகுழு அமைத்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் குப்பைகளை சரிவர அள்ளிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here