தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை

0
671

கிருஷ்ணகிரி,அக்,14
கர்நாடக மாநிலம் பெங்களூரு அதன் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில் நேற்றைய நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கு காலை வினாடிக்கு 3,798 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 4,644 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்தது. அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு அணைக்கு நீர்வரத்து 4,554 கனஅடி வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 4,554 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையின் நேற்றைய நீர்மட்டம் 50.70 அடியாகும்.
அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வருவதாலும், அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று கரையோரம் உள்ள மக்களுக்கு 54-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தரைப்பாலங்களில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here