தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

0
64

கிருஷ்ணகிரி,மே.21
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பா.ஜனதா கோட்ட அளவிலான நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அமைந்து 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனால் வருகிற 26-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், பா.ஜனதா கட்சியின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் மின்வெட்டை போக்க இதுவரை இல்லாத வகையில் மத்திய அரசு ரூ.900 கோடி ஒதுக்கி உள்ளது. தனியாரிடம் யூனிட் மின்சாரம் ரூ.5-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு யூனிட்டை ரூ.2.90 காசுக்கு வழங்கி வருகிறது.
மின்வெட்டு பிரச்சினையை போக்க தமிழக அரசை காட்டிலும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி. மசோதா மூலம் பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அன்னிய செலாவணியாக ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. கதர் துறையில் மட்டும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 56 இடங்களில் வருமானவரி சோதனை நடந்தது. கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியினரும், தி.மு.க.வினரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பா.ஜனதா இந்த வருமான வரி சோதனையை நடத்தியதாக கூறுகிறார்கள்.
ஊழல் யார் செய்தாலும், பா.ஜனதாவினராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஊழல் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்-அமைச்சர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், காவல் துறையினரை கண்டிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்திற்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கூடாது. உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி உள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மையான பலத்தை நிரூபிக்கும்.
நடிகர் ரஜினிகாந்த் பா.ஜனதாவுடன் சென்று விடுவார் என்ற அச்சத்தில் மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் ஏன் பதறுகிறார்கள். அரசியலில் சேருவது குறித்து ஆண்டவன் முடிவு செய்வான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறுவதை போல, அவர் எந்த கட்சியுடன் கூட்டணி சேருவார் என்பதை அந்த ஆண்டவனிடமே நான் விட்டு விடுகிறேன்.
ஜூன் 14-ந் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி டாஸ்மாக்கை நீக்கும் தாமரை போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்து பா.ஜனதா நிர்வாகிகள், பெண்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here