டிராக்டரில் குடிநீர் எடுத்து செல்வதை தடுக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை

0
85

கிருஷ்ணகிரி: ஏப்.20
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக தண்ணீர் எடுத்துச் செல்லும் டிராக்டர் உரிமையாளர்களை, போக்குவரத்து துறை அதிகாரிகள் தடுக்கக் கூடாது என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சந்தூர் அடுத்த சுண்டகாபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர், நேற்று கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: போச்சம்பள்ளி தாலுகா சந்தூர், குள்ளம்பட்டி, மகாதேவகொல்லஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு தற்போது தண்ணீர் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, டிராக்டரில் தண்ணீர் எடுத்து வந்து சந்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது வீட்டுத் தேவைக்கும், விவசாயத் தேவைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், டிராக்டரில் தண்ணீர் கொண்டு வரும் போது, வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் தண்ணீர் எடுத்து வரும் டிராக்டர்களை பறிமுதல் செய்து, 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். இதனால் டிராக்டர் உரிமையாளர்கள் தண்ணீர் எடுத்து வர மறுப்பதால், சந்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா மற்றும் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. டிராக்டரில் தண்ணீர் எடுத்து வருவதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தடுக்கக் கூடாது. இதையும் மீறி தடுத்தால், விவசாயிகள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here