ஜனநாயகத்திற்கு ஆபத்து

0
8

புதுடெல்லி, ஜன. 12-
உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்றும் தலைமை நீதிபதி முறைப்படி செயல்படவில்லை என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே எடுப்பதாகவும், இப்படியே போனால் ஜனநாயகம் நிலைக்காது எனவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தள்ளனர். மேலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

வரலாற்றிலேயே முதல்முறையாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சய் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை இன்று (ஜன.,12) சந்தித்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
வரலாற்றில் இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வேறு வழியே இல்லாததால் பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம். தற்போது பத்திரிகையாளர்களை சந்திக்க மகிழ்ச்சியுடன் வரவில்லை.

கடந்த சில மாதங்களாக சுப்ரீம் கோர்ட் நிர்வாகத்தில் விரும்பத்தகாத நிகழ்வு நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் தற்போது முறையானதாக இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை சரி செய்யப்படவில்லை என்றால் ஜனநாயகத்தை காக்க முடியாது என கருதுகிறோம். ஜனநாயகத்திற்கு சுதந்திரமான நீதிபதி தேவை. இப்படியே போனால், ஜனநாயகம் நிலைக்காது. நீதித்துறைக்கு எங்களை போன்ற மூத்த நீதிபதிகள் பொறுப்பானவர்கள் என்பது எங்களது கருத்து.

சில மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். குளறுபடிகளுக்கு பதில் இல்லை. எங்கள் முயற்சி தோல்வியடைந்தது. சில விஷயங்கள் முறைப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்தினோம். சில விஷயங்கள் முறைப்படி பின்பற்றப்படவில்லை. தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் பயனில்லை. வேறு வழியில்லை என்பதால் தான் மக்கள் மத்தியில் பேச வேண்டும் என முடிவெடுத்தோம்.

எங்களது கவலைகளை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். நீதித்துறையில் குளறுபடி நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது. சுப்ரீம் கோர்ட்டை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன .
சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவே எடுக்கிறார். தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here