சங்கடங்கள் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்

0
488

திருச்சி, ஏப். 21-
ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதால் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு. உற்சவர் அம்மனின் திருநாமம் ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்பதாகும். கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் இத்தலத்தை காவல் புரிகிறார்.

இந்த கோவிலில் மூன்று விநாயகர்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர்.
இத்தல அம்மன் சிவரூபமாக அறியப்படுவதால், விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. வேப்ப மரம்தான் இங்கு தல விருட்சம். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.

சமயபுரம் மாரியம்மன் சித்திரை திருவிழா சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம், தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஸ்ரீரங்கநாதனின் தங்கையாக போற்றி வணங்கப்படும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் அண்ணன் ரங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன.

அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது. அதுபோல சித்திரை தேரோட்டத்தின் போது சமயபுரம் மாரியம்மனுக்கான சீர்வரிசைகள், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இருந்து வருகிறது.

தெப்பத்திருவிழா சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தெப்ப உற்சவம் இன்று நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தெப்பத்திருவிழா என்பது கோயில்களில் மிதவையில் இறைவனையும் இறைவியும் மிதக்கவிடும் திருவிழா ஆகும். பிறவியெனும் கடலில் விழுந்தவர்களை இறைவினின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை அறியத்தருவதற்காக இவ்விழா நடைபெறுகிறது.

வெயிலுக்கு குளுமை தெப்போற்சவம் பெரும்பாலும் சித்திரை மாதத்தில் அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாவாகும். கோடை வெயிலின் தாக்கத்தை மறந்து குளக்கரையில் வஸந்த ருதுவில் சில்லென இயற்கையின் குளுமையை தர சூரியனின் பரம விரோதியான சுக்கிரனால்தான் முடியும். திருவிழா கொண்டாட்டம் மகிழ்ச்சி இதற்கெல்லாம் காரகர் சுக்கிரன்தாங்க! தண்ணீர் பஞ்சம் வராது மேலும் தெப்ப உற்சவம் நடக்கவேண்டுமென்றால் குளத்தில் நீர் நிறைந்திருக்கவேண்டும்.

ஊருக்கு நடுவே குளத்தில் நீர் நிறைந்திருந்தால் ஊரில் தண்ணீர் பஞ்சமே வராது. வீட்டில் பணத்தை சிக்கனமாக செலவழித்தால் பணத்தட்டுபாடே வராது என தண்ணீர் பணம் இரண்டிற்கும் காரகனான சுக்கிரன் விளக்கும்படியாக அமைந்ததுதான் தெப்பம். மகிழ்ச்சியின் நாயகர் நாம் படும் பிரச்சனை அனைத்திலிருந்தும் விடுதலை தருபவர் சுக்கிரன் தானாம். எந்தொரு பிரச்சனையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும். நோயாளிகளின் நோயை குணப்படுத்தி சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன். மாரியம்மனை வணங்குவோம் என்னங்க! தெப்பத்தை பற்றி பேசிகொண்டிருந்தீங்க. திடீர்ன்னு சம்மந்தமே இல்லாம சுக்கிரனை பற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்கள்? அப்படின்னு கேட்பவரா நீங்கள்? சுக்கிரனுக்கும் தெப்பத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குங்க. வாகனத்திற்க்கு காரகன் சுக்கிரன்தாங்க. அதிலும் நீரில் மிதக்கும் சுகமான வாகனம் என்றால் சுக்கிரனை தவிர யார் இருக்க முடியும்?. பிறவிப்பெருங்கடலில் கரையேற முடியாமல் தத்தளிப்பவர்கள் ஆசைகளை துறந்து சுக்கிரனின் அம்சமான பெண்தெய்வம் ஸ்ரீசமயபுரம் மாரியம்மனை வணங்கி கரையேருவோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here