குடிநீர் பிரச்னையை கண்டித்து 6 இடங்களில் ஆர்ப்பாட்டம்: 2 இடங்களில் சாலை மறியல்

0
117

திருவண்ணாமலை: ஏப். 21-
திருவண்ணாமலை மாவட்டத்தில், குடிநீர் பிரச்னையை கண்டித்து, ஆறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும், இரு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலையில், குடிநீர் பிரச்னையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பானை உடைப்பு போராட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் பலராமன் தலைமை வகித்தார். தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை, போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்வெல் கிணறு, திறந்த வெளி கிணறுகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பானைகளை உடைத்து போராட்டம் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சேத்பட், ஆரணி, வந்தவாசி, செய்யாறு உள்பட ஆறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும், செங்கம் அருகே கொட்டகுளம், மற்றும் கொல்லக்கொட்டாய் பகுதியில் கடந்த, மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி நேற்று காலை, 10:30 மணிக்கு திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். செங்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, மறியலில் ஈடுபட்ட பெண்கள், போலீசாரின் காலில் விழுந்து அழுது புரண்டனர். என்ன செய்வது என, தெரியாமல் போலீசார் திகைத்தனர். இதையடுத்து செங்கம் தாசில்தார் உதயகுமார், புதுப்பாளையம் பி.டி.ஓ., நக்கீரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர். இதனால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்று, தண்டராம்பட்டு அருகே மோத்தக்கல், மற்றும் நவம்பட்டு கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, இரு கிராம மக்களும் இணைந்து அரூர் – திருவண்ணாமலை சாலையில், மறியல் போரட்டம் நடத்தினர். தானிப்பாடி போலீசார் மற்றும் தண்டராம்பட்டு பி.டி.ஓ.,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here