கிருஷ்ணகிரி அணையில், 3-வது நாளாக உடைந்த மதகின் ஷட்டரை அகற்றும் பணி தீவிரம்

0
20

கிருஷ்ணகிரி,டிச, 7
கிருஷ்ணகிரி அணையின் முதல் மதகின் ஷட்டர் கடந்த 29-ம் தேதி உடைந்தது. அதில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதியும், உடைந்த மதகின் ஷட்டரை மாற்றிடவும், அணையின் நீர்மட்டத்தை குறைக்க, தென்பெண்ணையாற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உடைந்த மதகின் ஷட்டரை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. 25 பேர் கொண்ட தொழிலாளர்கள் மதகின் இணைப்பு இரும்புகளை காஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுக்க தொடங்கினர். அந்த பணி முழுவீச்சில் தற்போது நடந்து வருகிறது. நேற்று 3-வது நாளாக மதகின் ஷட்டரை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.இதுகுறித்து, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் கூறும்போது, உடைந்த ஷட்டர் பாகங்களை வெல்டிங் மூலம் தொழிலாளர்கள் மிகுந்த பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர். புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் ஒரிரு நாளில் தொடங்கும். தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசனையுடன், புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் நடைபெறும் என்றார்.நேற்று காலை 8 மணி நிலவரப்படி 300 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 32 அடியாக உள்ளது.
நேற்று முதல் சுற்றுலா பயணிகள் அணைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here