கிருஷ்ணகிரி அணையின் உடைந்த மதகு ‘ஷட்டரை’ சரி செய்யும் பணி 2 நாட்களில் முடியும் அதிகாரி தகவல்

0
421

கிருஷ்ணகிரி, டிச, 6
கிருஷ்ணகிரி அணையின் உடைந்த மதகின் ‘ஷட்டரை‘ சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 2 நாட்களில் பணிகள் முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி அணையில் உள்ள முதல் மதகின் ‘ஷட்டர்‘ கடந்த 29-ந் தேதி மாலை உடைந்தது. இதனால் அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறியது. இந்த ஷட்டரை அகற்றும் பணிக்காக அணையில் இருந்த நீர்மட்டத்தை குறைப்பதற்காக அணையில் உள்ள 8 மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டன. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணையாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 51 அடியில் இருந்த கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம், நேற்று முன்தினம் 32 அடியாக குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அணையில் மதகில் உடைந்த ஷட்டரை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் உடைந்த ஷட்டரில் இருந்த இரும்பு கம்பிகளை வெல்டிங் மூலமாக அகற்றும் பணிகளை மேற்கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து ஷட்டரில் உடைக்கப்பட்ட இரும்புகள் பகுதி, பகுதியாக பிரித்து எடுக்கப்பட்டன. கியாஸ் வெல்டிங் மூலமாக 24 மணி நேரமும் இரும்புகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி அணையில் மதகில் உடைந்த ஷட்டரை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை 50 சதவீத இரும்புகள் வெல்டிங் மூலமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் 2 நாட்களில் முழுமையாக முடியும். தொழிலாளர்கள் இரவு, பகலாக ஷட்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஷட்டர் அகற்றப்பட்ட பிறகு புதிய ஷட்டர் பொருத்தும் பணி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 52 அடியாகும். நேற்றைய நீர்மட்டம் 32 அடியாகும். நேற்று மாலை நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 265 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 265 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை மதகில் உள்ள ஷட்டர் உடைந்த காரணத்தால், அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டதால் கிருஷ்ணகிரி அணை அருகில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியபடி சென்றது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் வரையில் 6 நாட்கள் கிருஷ்ணகிரி அணைக்குள் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. நேற்று குறைவான அளவு தண்ணீர் வெளியேறியதால், 6 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் கிருஷ்ணகிரி அணைக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
கிருஷ்ணகிரி அணையில் குத்தகைதாரர்களால் விடப்பட்ட மீன்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டதால் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பலரும், மீன்களை பிடித்து சென்றனர்.
இதன் காரணமாக அணையில் இருந்து நீர்வெளியேறிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமாக காணப்பட்டது. பொதுமக்கள் பலரும், மீனை கூட்டம் கூட்டமாக வந்து பிடித்து சென்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here