காலமும் நேரமும் மாறும்!’ – ரஜினி பேச்சு

0
43

சென்னை, டிச. 29-
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரர் கல்யாண மண்டபத்தில் நான்காவது நாளாக இன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். மிகுந்த உற்சாகத்துடன் ரஜினியை வரவேற்று ஆரவாரம் செய்தார்கள் ரசிகர்கள். காலமும் நேரமும் மாறும். மாறியே தீரும் என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது ரஜினி பேசியதாவது-

’நான்காவது நாளாக உங்களைச் சந்திக்கிறேன். இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது (என்று சொல்லி நிறுத்தினார். உடனே கைத்தட்டலும் விசில் சத்தமும் பறந்தது). பிறகு இரண்டுநாள் என்றால்… நான் உங்களைப் பார்ப்பது. அப்புறம் உங்களை நான் மிஸ் பண்ணுவேன். அதைச் சொன்னேன்.

கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கிறீர்கள். என் வாழ்வில் முக்கியமான இடம் பிடித்த ஊர் இது. நிறைய நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள். என் குருநாதர்கள் இருக்கிறார்கள். சுவாமி சச்சினாந்தரின் ஆஸ்ரமம் இருக்கிறது. என் நண்பரின் இல்லத் திருமணம். சிவாஜி சார், நான் என பலரும் விமானத்தில் சென்று, கோவை ஏர்போர்ட்டில் இறங்கினோம்.

அங்கே என்னைப் பார்த்ததும் ஏகப்பட்ட கூட்டம். என் பேரைச் சொல்லி, வாழ்க வாழ்க என்று கோஷம் போட்டபடி முன்னே வருகின்றனர். எனக்கோ தயக்கம். கூச்சம். பக்கத்தில் எவ்வளவு பெரிய மேதை இருக்கிறார். அவர் இருக்கும் போது என் பெயரைச் சொல்லி வாழ்க கோஷம் போட்டால் எப்படி இருக்கும் எனக்கு.
இதையெல்லாம் பார்த்த சிவாஜி சார், ’என்னடா… என்னடா நழுவுறே. இது உன் காலம்டா. உன்னோட காலம். நல்ல படங்களாக் கொடுடா. வாடா… முன்னே வாடா’ என்று அழைத்துக் கொண்டு, பத்திரமாக காரிலேற்றி அனுப்பிவைத்தார் சிவாஜி சார்.
எவ்வளவு பக்குவப்பட்ட மனிதர் சிவாஜி சார்.

அவருடைய குணம் அப்படிப்பட்டது. பணமும் காசும் இருந்தால் யார் வேண்டுமானாலும் மரியாதை கொடுப்பார்கள். இப்படியான குணங்கள் இருந்தால்தான் மதிப்பு கிடைக்கும். இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இவ்வளவு மதிப்பு இருப்பதற்கு அவரின் குணங்களே காரணம். யாராக இருந்தாலும் குணம் நன்றாக இருந்தால், அவர் எத்தனை நூற்றாண்டுகளானாலும் மதிக்கப்படுவார்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து, அதே கோவைக்கு வந்தேன். விமான நிலையத்தில் கூட்டம். என்னிடம் வந்து, ’சார்… அந்த நடிகர் வந்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் அதிகம். அதனால் கொஞ்சநேரம் பொறுத்திருங்கள். அவர் போனதும் போய்விடலாம்’ என்றார்கள். நான் சிவாஜி சார் சொன்னதை நினைத்துக் கொண்டேன். காலம். இது அந்த நடிகருடைய காலம். இப்படி காலமும் நேரமும் மாறும். அது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும். காலமும் நேரமும் மாறியே தீரும் என்று பேசினார் ரஜினிகாந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here