கருத்தடை அறுவை சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்ததால் பரபரப்பு

0
73

கிருஷ்ணகிரி, ஜூன்.17:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கருத்தடை அறுவை சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்ததால், இறந்த பெண்ணின் உடலை வைத்து உறவினர்கள் சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நாடுவானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயி. இவரது மனைவி சாவித்திரி(32). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 16 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த 12ம் தேதி வேப்பனஹள்ளியிலர் உள்ள
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுக பிரசவமாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் தாயும், சேயும் வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள வேப்பனஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்ய மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யாமல், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அனுமதி்க்கப்பட்ட சாவித்திரி அன்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
சாவித்திரியின் உடலை பெற்று வந்த உறவினர்கள் நேற்று நாடுவானப்பள்ளி கிராமத்தில் சாலையின் நடுவே வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் சாவித்திரி உயிரிழந்தாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறத்தினர். இதானல் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாசில்தார் மோகனசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் குருபரப்பள்ளி ராஜேந்திரன், தாலுகா அன்புமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையுடன் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். அசோக்குமாரிடம் கேட்ட போது, அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தினாலும், லேசாக சுய நினைவு இருக்க
வேண்டும். ஆனால் சாவித்திரிக்கு முற்றிலும் நினைவு இல்லாததால் சந்தேகம் அடைந்த மருத்துவர், அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இங்கு வந்த போது தான், அவர் கோமா நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை செயற்கை சுவாச கருவி மூலம் ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி
இருதயம் அடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துவிட்டார். இதுபோன்ற சம்பவம் லட்சத்தில்
ஒருவருக்கு நடக்கும். இது தவறு என சொல்ல முடியாது. மருத்துவ சிகிச்சையில் முயற்சி தோல்வி என தான் சொல்ல முடியும். இதற்காக உயிரிழந்த சாவித்திரியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here