ஓசூரில், குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

0
46

ஓசூர்: ஏப். 5-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 25–வது வார்டில் சீத்தாராம் மேடு என்ற பகுதி உள்ளது. இங்கு 500–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இங்கு குடிநீர் வினியோகிக்கப்படாததால், இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் காலிக்குடங்களுடன் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு அவர்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த அலுவலர்களிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மனு கொடுத்தனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நகராட்சி அலுவலர்கள், இன்னும் ஓரிரு நாளில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர்.
மேலும் லாரி, டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கவும் உடனடியாக ஏற்பாடு செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக அவர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் செயற்கை நீரூற்றில் வந்த தண்ணீரை பிடித்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here