உலகம் கிராமத்தில் டாஸ்மாக் கடை முற்றுகை: 27க்குள் அகற்றுவதாக தாசில்தார் உறுதி

0
72

ஓசூர்: ஏப்.20
சூளகிரி அருகே, உலகம் கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை, பொதுமக்கள், இரண்டாவது முறையாக முற்றுகையிட்டதால், 27க்குள் கடையை அகற்ற ஏற்பாடு செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில் இயங்கி வந்த, மூன்று டாஸ்மாக் கடை, ராயக்கோட்டையில், நான்கு கடை, சூளகிரியில், மூன்று கடை என, மொத்தம், பத்து டாஸ்மாக் கடைகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் இருந்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதனால், சூளகிரி – ராயக்கோட்டை சாலையில், உலகம் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு குடிமகன்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். குடிமகன்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு மதுபானம் வாங்கச் செல்வதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருவதுடன், டாஸ்மாக் கடை அருகே அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருவதால், மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறி, உலகம், அஞ்சாலம், போகிபுரம், கூலியம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கடந்த, 5 ல் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். ஆனால் கடையை அகற்றாமல் தொடர்ந்து மது விற்பனை செய்யப்பட்டு வந்ததால், நேற்று காலை மீண்டும், இரண்டாவது முறையாக, 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். மக்களிடம் சமாதான பேச்சுவாார்த்தை நடத்திய சூளகிரி தாசில்தார் பெருமாள், மதுவிலக்கு டி.எஸ்.பி., ஆறுமுகம் ஆகியோர், வரும், 27க்குள் கடையை அகற்ற ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here