உண்டு, உறைவிடப்பள்ளி மாணவி மர்ம சாவு காரணம் என்ன? போலீஸ் விசாரணை

0
156

சூளகிரி,அக், 12
சூளகிரி அருகே உண்டு, உறைவிடப்பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்தாள். அவள் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்ற இடத்தில் கஸ்தூரிபா உண்டு, உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 95 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 10 ஆசிரியைகள் பணியில் உள்ளனர்.
இந்த பள்ளியில் சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெகதீஷ் -ஆஷா தம்பதியரின் மகள் சோமேஸ்வரி (வயது 12) என்ற மாணவியும், தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளது அக்காள் பாக்யலட்சுமியும் இந்த உண்டு, உறைவிடப்பள்ளியிலேயே தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று முன்தினம் இரவு தனது அக்காளுடன் நீண்டநேரம் பேசிவிட்டு சோமேஸ்வரி தூங்க சென்றாள். நேற்று காலை வழக்கம்போல் அனைத்து மாணவிகளும் எழுந்தனர். ஆனால் சோமேஸ்வரி மட்டும் படுக்கையில் இருந்து எழவில்லை. இதுகுறித்து சக மாணவிகள், வார்டன் மாதலட்சுமியிடம் சென்று கூறினர்.
இதையடுத்து அவரும் விரைந்து வந்து சோமேஸ்வரியை எழுப்ப முற்பட்டார். மேலும் அவளது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சோமேஸ்வரியின் உடல் அசைவற்ற நிலையில் இருந்ததால் உடனடியாக சூளகிரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார், சோமேஸ்வரி உடலை கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் மர்ம சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here