உடும்பு, முயல்களை வேட்டையாடியவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு

0
106

ஊத்தங்கரை, ஜூன்.19
கல்லாவி அருகே காப்புக்காட்டில் உடும்பு, முயல்களை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள புதூர்புங்கனை காப்புக்காட்டில் மர்ம நபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் வேணுபிரசாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அவர் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் நாகேசுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கல்லாவி பிரிவு வனவர் துரைகண்ணு தலைமையில் வனத்துறையினர் புதூர்புங்கனை காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்கேத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் வந்துகொண்டிருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதைப் பார்த்த வனத்துறையினர் அவர்களை துரத்தினர்.
ஒருவர் கைது
இதில் ஒருவரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் இருந்த பையை வனத்துறையினர் சோதனையிட்டனர். அதில் உயிருடன் ஒரு உடும்பும், 2 முயல்களும் இருந்தன. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் ஊத்தங்கரை அருகே வெள்ளிமலை பகுதியை சேர்ந்த ராமநாதன் (வயது 42) என்பதும் தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (60) என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ராமநாதனை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த உடும்பு மற்றும் முயல்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சுந்தர்ராஜை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here