ஆர்.டி.ஓ., சமாதான பேச்சுவார்த்தை: உண்ணாவிரதத்தை கைவிட்ட மக்கள்

0
57

அரூர்: ஏப்.7
சித்தேரி மலை பஞ்.,க்கு உட்பட்ட கலசப்பாடியில், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மலை கிராம மக்களுடன், ஆர்.டி.ஓ., சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, நேற்று போராட்டம் கைவிடப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சித்தேரி மலை பஞ்.,க்கு உட்பட்ட கலசப்பாடி, அரசநத்தம், ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி, கோட்டக்காடு, அக்கரைக்காடு, தரிசக்காடு ஆகிய, ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள், நேற்று முன்தினம் காலை, 10:00 மணி முதல் கலசப்பாடியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், வகுப்புகளை புறக்கணித்து, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், வாச்சாத்தியில் இருந்து கலசப்பாடிக்கு செல்லும், ஏழு கிலோ மீட்டர் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். எஸ்.டி., ஜாதிச்சான்று வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் மணி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கலெக்டர் வரும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என, பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று, இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று மதியம், 3:00 மணிக்கு, கலசப்பாடிக்கு சென்ற அரூர் ஆர்.டி.ஓ., கவிதா, மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நான்கு மாதங்களில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என, உறுதியளித்தார். மேலும், 70 பேருக்கு எஸ்.டி., ஜாதி சான்றிதழ்களையும்
வழங்கினார். இதையடுத்து, 4:30 மணிக்கு மலை கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here